Close

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் வேளாண்மை பெரும் பங்கு வகிக்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள்தொகையில் சுமார் 70 சதவிகித மக்களுக்கு வேளாண்மை மற்றும் வேளாண் சார்பு தொழில்களே வாழ்வாதாரமாக அமைந்துள்ளன. தமிழகத்தின் மத்திய பகுதியில் 4,40,383 ஹெக்டேர் பரப்பளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவில் 98,739 ஹெக்டேர் இறவை பாசனத்திலும், 66,652 ஹெக்டேர் மானாவாரியிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி, இலால்குடி, முசிறி கோட்டங்களில் சுமார் 51,000 ஹெக்டேர் பரப்பளவு காவிரி பாசனம் மூலம் பயனடைகிறது.

நோக்கம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விவசாயிகளின் வேளாண் சார் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக விளங்கி வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் உற்பத்தியினை பெருக்கிட விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் அளிப்பது, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உயர் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற இன்றியமையாத பணிகளை தனது குறிக்கோளாக கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பணியாற்றி வருகிறது.

குறிக்கோள்

  1. பயிர் சாகுபடி பரப்பினை விரிவாக்கம் செய்தல்.
  2. உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்.
  3. விவசாயிகளுக்கு இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்பதனை உறுதி செய்தல்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை “இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்“ என்ற இலக்கினை அடைய தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், நுண்ணீா் பாசனத் திட்டம், கூட்டுப் பண்ணையம், விதை கிராமத் திட்டம், எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்ப்பனைக்கான தேசிய இயக்கம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு பருத்தி உற்பத்தி இயக்கம், நீடித்த வேளாண் தேசிய இயக்கம், மண்வள இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாகுபடி பரப்பு

தமிழகத்தின் மத்திய பகுதியில் 4,40,383 ஹெக்டேர் பரப்பளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவில் 98,739 ஹெக்டேர் இறவை பாசனத்திலும், 66,652 ஹெக்டேர் மானாவாரியிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி, இலால்குடி, முசிறி கோட்டங்களில் சுமார் 51,000 ஹெக்டேர் பரப்பளவு காவிரி பாசனம் மூலம் பயனடைகிறது.

மலை மற்றும் வனப் பகுதிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் பன்னிரண்டில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அமைந்துள்ளது. துறையூா் வட்டத்தில் அமைந்துள்ள பச்சைமலை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதியாக அறியப்படுகிறது.

மண் வகை

மணல்சாரியான செம்மண் வகையினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பெருவாரியான பகுதியில் காணலாம். மேலும், பிறப்பகுதிகளில் களிமண் வகையும் காணப்படுகிறது.

பருவநிலை மற்றும் மழையளவு

பருவநிலை அடிப்படையில் தமிழகம் ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் காவிரி டெல்டா மண்டலத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் நிலவி வருகிறது. மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழையளவு 818 மி.மீ ஆகும். மாவட்டத்தில் பெறப்படும் மழையளவில் பெரும்பகுதி வடமேற்கு பருவ காலங்களில் பெறப்படுகிறது.

பயிர்சாகுபடி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நெல், வாழை, சிறுதானியங்கள், பயறுவகைப் பயிர்கள், கரும்பு, பருத்தி, காய்கறி மற்றும் மலர்கள் பெருவாரியாக சாகுபடி செய்யப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சராசரியாக 60,600 ஹெக்டேர் பரப்பளவில் நெல், 44,700 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள், 22,200 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்துப் பயிர்கள், 19,000 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி, 14,500 ஹெக்டேர் பரப்பளவில் பயறுவகைப் பயிர்கள், 9,167 ஹெக்டேர் பரப்பளவில் வாழை, 6,000 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி, 3,410 ஹெக்டேர் பரப்பளவில் வெங்காயம், 2080 ஹெக்டேர் பரப்பளவில் மா, 1,995 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய், 800 ஹெக்டேர் பரப்பளவில் பூக்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

முக்கிய ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள்

பாசன ஆதாரங்கள்

காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்கள், ஏரி மற்றும் குளங்கள், ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவற்றின் மூலம் மாவட்டத்தின் பாசனத் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி மற்றும் அதன் கிளை கொள்ளிடம் ஆகியவை முக்கிய ஆறுகளாக உள்ளன. நந்தியாறு, கோரையாறு, அரியாறு மற்றும் பொன்னனியாறு ஆகியவையும் குறிப்பிடப்படும்படியான ஆறுகள் ஆகும். காவிரியின் கிளை வாய்க்கால்களான புள்ளம்பாடி வாய்க்கால், கட்டளை மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால், அய்யன் வாய்க்கால் மற்றும் பெருவளை வாய்க்கால் ஆகியவை முக்கியமான பாசன வாய்க்கால்கள் ஆகும்.

  1. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு:
    தமிழகத்தின் மிக முக்கிய ஆறான காவிரி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரு கிளைகளாக பிரிந்து வடக்குப் பகுதி கொள்ளிடம் ஆறாகவும், தெற்குப் பகுதி காவிரி ஆறாகவும் சுமார் 125 கி.மீ. வரை பாய்கிறது.
  2. கோரையாறு :
    கோரையாறு கருப்பூா் ரெட்டியார்பட்டி மலைப்பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து உற்பத்தியாகிறது. புத்தாநத்தம், விராலிமலை, மலைக்குடிப்பட்டி, தென்னலூா், இலுப்பூா் மற்றும் துவரங்குறிச்சி வடிநிலப் பகுதிகளிலிருந்து மழை நீா் கோரையாற்றில் பாய்கிறது. கோரையாறு சுமார் 632 ச.கி.மீ. வடிநில பகுதிகளைக் கொண்டது. இப்பகுதியில் அதிக அளவிலான ஏரிகள் மற்றும் குளங்கள் அமைந்துள்ளன.
  3. அரியாறு :
    அரியாறு மணப்பாறை பகுதி பள்ளிவெளிமுக்கு பகுதியிலிருந்து உற்பத்தி ஆகிறது. கடவூா் மற்றும் செம்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வைரம்பட்டி, குளத்தூா், மணப்பாறை வடிநிலப் பகுதிகளிலிருந்து மழை நீா் அரியாற்றில் பாய்கிறது. அரியாறு சுமார் 832ச.கி.மீ. வடிநில பகுதிகளைக் கொண்டது.
  4. மேலணை :
    மேலணை, ஸ்ரீரங்கத்தின் மேற்கு பகுதியில் காவிரி இரண்டாக பிரியும் இடத்தில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் பாயும் நீரின் அளவினை கட்டுப்படுத்தும் வகையில் 236 மீட்டர் நீளத்தில் 1836-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  5. கல்லணை :
    கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட கல்லணை காவிரியின் வடக்குப் பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்லணை பாசனத் தேவைகளை பூா்த்தி செய்கிறது. கல்லணைப் பகுதியில் காவரி ஆறு மேலும் இரு பகுதிகளாக பிரிந்து வெண்ணாறு மற்றும் காவிரி என அழைக்கப்படுகிறது

தொடா்பு அலுவலர்

வேளாண்மை இணை இயக்குநர்,
மன்னார்புரம்,
திருச்சிராப்பள்ளி.
0431-2420554

வட்டார அளவிலான வேளாண்மை உதவி இயக்குநர்களின் தொடா்பு விவரங்கள்:
வ.எண். வட்டாரம் தொடா்பு எண்.
1 அந்தநல்லூா் 75502 16322
2 மணிகண்டம் 75502 16323
3 திருவெறும்பூா் 75502 16324
4 மணப்பாறை 75502 16325
5 மருங்காபுரி 75502 16326
6 வையம்பட்டி 75502 16327
7 முசிறி 75502 16328
8 தொட்டியம் 75502 16329
9 தா.பேட்டை 75502 16330
10 துறையூா் 75502 16331
11 உப்புலியாபுரம் 75502 16332
12 இலால்குடி 75502 16335
13 மண்ணச்சநல்லூா் 75502 16336
14 புள்ளம்பாடி 75502 16337